Monday, 25 July 2016

கூன் பாண்டியனை, நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்


பாண்டிய நாட்டின் மன்னன் கூன் பாண்டியன் புறச்சமயம் தழுவி சைவ சமயத்தை ஒடுக்கி மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வந்தான். மதம் மாற்றிகளின் சூழ்ச்சியிலிருந்து பாண்டிய மன்னனை மீட்டு மக்களை காப்பதற்காக ஞான சம்பந்தர் உடனே மதுரை நோக்கிக் கிளம்பினார். அப்போது அப்பரடிகள் ஞான சம்பந்தரைப் பார்த்து ”நாளும் கோளும் சரியில்லை பிறகு செல்லலாம்” என்றார். ” வேயுறு தோளிபங்கன்” என்ற கோளறு திருப்பதிகத்தை பாடி மதுரைக்கு புறப்பட்டார். மதுரையில் மாற்றுச் சமயத்தாரின் செயலால் ”வெப்பு நோயால்” துடித்துக் கொண்டிருந்தான் கூன் பாண்டியன். ”மந்திரமாவது நீறு” என்ற பதிகத்தைப் பாடி மன்னனின் நோயை நீக்கினார்.
      கோபங் கொண்ட புற சமயத்தார், அனல்வாத போட்டிக்கு அழைத்தனர். ஞானசம்பந்தரும் திருநள்ளாற்று பதிகத்தைப் பாடி அந்த ஓலைச்சுவடியைத் தீயிலிட்டார். ஆனால் அது நெருப்பிலிருந்து பச்சை ஏடாகவே மேலெழுந்தது. ஆகவே இன்றும் அந்தப் பதிகத்திற்கு பச்சை ஏட்டுப் பதிகம் என்றே பெயர்.

      மீண்டும் கோபம் கொண்ட புறச்சமயத்தார்,  புனல் வாத போட்டிக்கு ஞானசம்பந்தரை அழைத்தனர். ”வாழ்க அந்தனர்” எனத் துவங்கும் பதிகத்தை வைகை ஆற்றில் விட்டவுடன் ஆற்று நீரில் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே தொலைதுார கிராமத்தின் கரையில் ஒதுங்கியது பதிக ஏடு… அந்த ஊரே திருவேடகம். வைசம் தழைத்தது. கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாக மாறினான். சமயப் பாதுகாப்பே மீண்டும் சாதித்தார் சம்பந்தர்.

Sunday, 17 July 2016


 ஆடு புலி ஆட்டம்
நமது பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுக்களில் ஒன்றான ஆடுபுலி ஆட்டத்தை கணிப்பொறியில் விளையாட வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்ட தளத்திற்குச் செல்லுங்கள். சந்தோஷமாக விளையாடுங்கள்.

http://dev.neechalkaran.com/p/aadu-puli.html#.V4tDv9V97cd

Saturday, 16 July 2016

மதுரை – சில செய்திகள்

மதுரை பற்றிய இலக்கியங்கள் காட்டும் சில செய்திகள்

1) கீழச்சித்திரை வீதியில், புதுமண்டபத்திற்கு எதிரில் உள்ள கிழக்கு கோபுர வாசலே கோவிலுக்கு நுழைவு வாயிலாக இருந்தது. 1700களில் கோவிலில் பணியாற்றிய ஒருவர் அக்கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ததால்அவ்வாசல் பயன்பாடு குறைந்து, தற்பொழுது உள்ளஅஷ்டலட்சுமி நுழைவு வாயில் பயன்படுத்தப்படுகிறது. இதுப்பற்றிய கல்வெட்டு கிழக்கு கோபுரத்தில் உள்ளது.

2) மதுரையை நான்மாட கூடல் என்று அழைப்பர். கூடல் ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன். மாடம் என்றால் வெளிசுற்று சுவரின் (compound wall) மேல் தெருவை பார்க்க அமைந்த இடம் (மதுரை காஞ்சி – நச்சினார்கினியார் உரை).Benhur (1959) ஆங்கிலப் படத்தில் ரோமானிய படையை வேடிக்கை பார்க்கும் காட்சியில் மாடத்தின் அமைப்பைப் பார்க்கலாம். நான்கு திசைகளிலும் மாடங்களுடன் கட்டிடங்கள் இருந்ததால் இப்படி அழைக்கப்பட்டது. (மாடம் ஓங்கிய மூதூர் - நெடுநல்வாடை 29, மாடம் பிறங்கிய மலிபுகழ்க்கூடல் – மதுரை காஞ்சி 429).

3) வீட்டின் நிலா முற்றத்தில் நீர் வந்து விழும் மகர வாயாக பருத்த வாயினையுடைய அம்பனம் (வீட்டின் கூடுவாய் மூலையிலமைந்த நீரை வீழ்த்தும் கருவி) – அதாவது drainage pipe – இது நெடுநல்வாடை 95-97

4) சுவர் செம்பினாலே செய்ததது போலும், மெல்லிய பூக்களையுடைய கொடியை வரைந்தும் இருக்கும் (நெடுநலவாடை 109-114)

5) வீடுகள் மண்டபம், கூடம், தாயக்கட்டு, அடுக்களை கொண்டதாக இருக்கும் – மதுரை காஞ்சி 357 – 361.

6) மதுரையின் தலைவானாக சிவன் – நீர், நிலம், தீ, காற்று, வானம் ஜந்தும் உடன் இயற்றிய மழுவாள் நெடியோன். தெய்த்தன்மையால் கூடிய முருகன் – இவர்களுக்கு உயர் பலி (ஆடு, கோழி) கொடுப்பதற்கு வாச்சியங்கள் ஒலிக்க (மதுரை காஞ்சி 453 – 460)

7) புத்த கோவில் – புறம் காக்குங் கடவுள் பள்ளியென்று அழைக்கப்பட்டது, அங்கு பெண்கள், குழந்தைகளை அழைத்துச்சென்றனர் – மதுரை காஞ்சி 466-467. சிவன் வழிபாட்டிற்கு அடுத்து, புத்த வழிபாடு இருந்துள்ளது.

8) வேதங்களை விளங்கும் படி பாடி, ஒழுக்கத்தோடு வாழும் பெரியோர் உறையும், குன்று குயின்றாற் போல் (கோபுரம்) இருக்கும் அந்தர் பள்ளி – மதுரை காஞ்சி 468-474

9) பூவும், புகையுடன் சாவகர் (சமனர்) வாழ்த்தி வணங்கும் இடம். இவ்விடம் செம்பால் செய்தது போல், செவந்த சுவர்கள்– மதுரை காஞ்சி 475-489

10) அறம் கூறும் அவை (நீதி மன்றம்) இருந்தது – மதுரை காஞ்சி 490-492

11) அமைச்சர்கள் கூடும் அவை இருந்தது – மதுரை காஞ்சி 493-499

12) மடிப்புடவைகள் சிறியதும், பெரியதுமாக, மெல்லியதாக இருந்தன - மதுரை காஞ்சி 519-522

13) restaurants – உணவகம் இருந்தது. அதில் இனிப்பு கடிகையும் (sancks), பால் சோறும், கண்டசக்கரை சோறும், கிழங்குகளும், புகழ்ச்சிகள் உண்டாகும் படி சமைத்த பெரிய இறைச்சிகளையுடைய சோறும் (பிரியாணி ?), இருந்தன – மதுரை காஞ்சி 532-535.
14) விலைமாதர் இருந்தனர், மயக்கி பணம் பறிக்கும் மாதர்கள் (call girls), இருந்தனர் – மதுரை காஞ்சி 559 – 583.

15) மாயோன் முருகன் பிறந்த நாளை ஒணம் என்று கொண்டாடினர் – மதுரை காஞ்சி 590 -619

16) சில கடிகைகள் – பாகில் சமைத்த மெல்லிய அடை, பருப்பு, தேங்காய், கண்டசக்கரை கூட்டி பிடித்த அப்பம் (கொழுக்கட்டை ?), இனிய பாகு கலந்த மாவு அப்பம் (கருப்பட்டி அப்பம்) – மதுரை காஞ்சி 620 – 651

17) மக்கள் தோல் செருப்பு அணிந்தனர் – மதுரை காஞ்சி 636

18) புடவைகளில் கஞ்சி இடப்பட்டது – மதுரை காஞ்சி 721

19) septic tank  இருந்து இருக்கலாம் – ‘கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க்கிடங்கினல் லெயி லுழ்ந்த செல்வர் தம்மின் கல் இடித்து இயற்றிய நாற்றமுடைய நீர் வாய் கிடங்கின் நல் மதில் இருந்த செல்வர்’ – மதுரை காஞ்சி 730

20) மடிப்புடவைகள் பருத்தி நூலிலும், எலிமயிரினாலும், பட்டுநூலினாலும் செய்யப்பட்டது – சிலம்பு 205-207


21) புடவைகள் ஒள்ளிய பூ வேலைப்பாடுடையதாக இருந்தது – மதுரை காஞ்சி 432-433

Friday, 8 July 2016


 மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்


          மதுரை நகரமும், அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களும் நாடு போற்றும் நல்ல பல தியாகிகளைக் கொடுத்திருக்கிறது. தென் மாவட்டங் களில்தான் எத்தனை எத்தனை சுதந்திரப் போர் நிகழ்ச்சிகள்? பெயர் தெரிந்த, பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நினைவுகூர முடியாவிட்டாலும், ஒரு சிலரைப் பற்றிய விவரங்களையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் அல்லவா? அந்த வகையில் மதுரை ஸ்ரீநிவாஸ ஐயங்கார் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

1919ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சில ஆண்டுகள் மதுரை வீதிகளில் ஓர் புதுமை தொடங்கி நடந்து வரலாயிற்று. விடியற்காலை நேரம். கிழக்கே வெள்ளி எழும் பொழுது; அப்போது மகாகவி பாரதியாரின் "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" எனும் பூபாள ராகப் பாடல் இனிமையாகப் பாடப்பெறும் ஒலி கேட்கும். இந்தப் பாடல் ஒலி கேட்ட மாத்திரத்தில் ஆங்காங்கே பல வீடுகளிலிருந்து சிறுவர்கள் எழுந்து வந்து அவசர அவசரமாக, அந்த பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு, கையில் ஒரு மூவண்ணக் கொடியை ஏந்திக்கொண்டு, வெள்ளை அங்கியும், காவி தலைப்பாகையுமாக வந்துகொண்டிருக்கும் அந்த மனிதரோடு சேர்ந்து கொள்வார்கள். நேரமாக ஆக அந்த பாரத மாதா பஜனை கோஷ்டி பெரிதாக ஆகிவிடும். இந்த பஜனை பல தெருக்களைச் சுற்றிவிட்டு இறுதியில் அந்த மனிதரின் வீட்டுக்குப் போய்ச்சேரும். அங்கு அந்த சிறுவர்களை உட்கார வைத்து நாட்டு நடப்பையும், ஆங்கிலேயர்களை நம் நாட்டை விட்டுத் துரத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசுவார். அந்த பேச்சு அந்த இளம் சிறார்களின் அடிமனதில் போய் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இதனைக் கண்டவர்கள் பலர் இவர் ஒரு 'சுயராஜ்யப் பைத்தியம்', இவர் சுயராஜ்யம் வாங்கப் போகிறாராம். அதற்கு இந்த குழந்தைகளின் பட்டாளத்தைத் தயார் செய்கிறார் என்று கேலி பேசுவார்கள்.

மகாகவி பாரதியார் பாடல்கள் அனைத்தையும் இவர் மதுரை தெருக்களில் பாடிப் பிரபலப் படுத்தினார். இவற்றில் பல பாடல்கள் வெளியிடப்பட்டிருக்காது; இருந்த போதிலும் அவை ஸ்ரீநிவாஸவரதன் பாடிப் பாடி பிரபலப் படுத்தி விடுவார். இவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் உடனடியாக பாரதியாரும் அவரது பாடல்களும்தான் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு இவர் 'பாரதி பக்தன்'; ஏன்? இவரை பாரதிப் பித்தன் என்றே சொல்லலாம்.

1917ஆம் வருஷம், இவர் அன்னிபெசண்ட் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் பங்கு கொண்டார். சுதந்திரப் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு இவர் பலமுறை சிறை சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவர் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். இவரை எல்லோரும் 'நிஷ்காம்யகர்மன்' என்றும் 'கர்மயோகி' என்றும் அழைக்கலாயினர். இவர் மிகமிக எளிமையானர். இவர் பிறந்தது 1896ஆம் வருஷம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று. வாழ்க்கையில் எவரிடமும் வேற்றுமை பாராட்டாதவர். அனைவரும் இவருக்குச் சமமே! தேசியம்தான் இவருக்கு மதம். தேசியம்தான் வாழ்க்கை. பிறருக்கு உதவுவதென்பது இவரது இரத்தத்தில் ஊறிய பண்பு. தலைசிறந்த தேசியவாதிகளாகத் திகழ்ந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதி ஆகியோரிடம் நட்பு கொண்டு பழகியவர். 1919இல் இவர் பொதுச்சேவையில் ஈடுபட்ட நாள்முதல் காங்கிரஸ் இயக்கத்தின் கட்டளைகள் அனைத்திலும் பங்கேற்றவர். தன் கொள்கைகளைச் சிறிதுகூட விட்டுக்கொடுக்காதவர். எதிர் கட்சிக்காரர்களானாலும், அவர்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்து வந்தவர்.

இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துத் தேறியவர். நல்ல எழுத்தாளர்; சொற்பொழிவாளர். நல்ல குரல் வளம் இருந்ததனால் நன்கு பாடக்கூடியவர். பாரதியார் பாடல்களை இனிய குரலில் பாடி பிரபலப்படுத்தியவர். இவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் அதனை பொறுப்போடும், திறமையோடும் செய்யும் ஆற்றல் படைத்தவர். கலைத் துறையிலும் இவர் தன் திறமையைக் காட்டத் தவறவில்லை. நாடகங்களில் நடித்தார்; திரைப்படங்களும் இவரை ஏற்றுக் கொண்டன. ஆங்காங்கே இவர் பல வாசகசாலைகளையும், சங்கங்களையும் அமைத்தார். இவருக்குத்தான் மகாகவி பாரதி கடையத்தில் இருந்தபோது தன் நூல்களை பிரசுரம் செய்வது பற்றி மிக விரிவாக கடிதம் எழுதினார். தீப்பெட்டிகளைப் போல் தன் நூல்கள் அனைவர் கைகளிலும் அரையணா, காலணா விலைக்குப் போய்ச்சேர வேண்டுமென்று பாரதி விரும்பி எழுதியது இவருக்குத்தான்.

1936இல் தனது நாற்பதாவது வயதில் தன் மூத்த தாரத்தை இழந்தார். 1943இல் தன் ஒரே மகனையும் இழந்தார். இவரது முதல் மனைவி ஒரு தேசபக்தை. பத்மாஸினி அம்மையார் என்று பெயர். அவரைப் பற்றி நாம் முன்பே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். மறுபடியும் அதே பத்மாஸினி எனும் பெயரில் 1946இல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும் பிறந்தனர். இந்த பத்மாஸினியும் இவருக்கு ஏற்றபடி தேசபக்தராயும், நல்ல இசை ஞானம் உள்ளவராகவும் இருந்தார். இவர் தனது 67ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டு 1962 பிப்ரவரி 4ஆம் தேதி சோழவந்தானில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தேசபக்தர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் புகழ்!
 முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

முனகல பட்டாபிராமய்யா என்ற பெயரைப் பார்த்தவுடன் இவர் ஏதோ ஒரு ஆந்திரத்து தேசபக்தர் போல இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா? ஆம்! இவரது பூர்வீகம் ஆந்திராவிலுள்ள முனகல எனும் ஊர்தான். இவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து மதுரை அருகிலுள்ள சோழவந்தானில் குடியேறியவர். இவரது முன்னோர் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலுக்குப் பின்புறம் வைகையாற்றில் பொதுமக்கள் நீராடுவதற்காக ஒரு படித்துறையை அமைத்தார்கள். 'முனகல' எனும் சொல்லுக்கு முனையுள்ள கல் என்று பொருள். இப்படியொரு படித்துறையை பாறாங்கல் கொண்டு கட்டுவார்கள் என்பதாலேயே முனகல என அழைக்கப்பட்டார்கள் போலும். 

முனகல பட்டாபிராமையா ஒரு பன்மொழி வித்தகர். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றதோடு, வேத சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து மக்களை நன்கு அறிந்து கொண்ட பட்டறிவும் பெற்றவர்.

1919இல் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கம் இவரை முதன்முதல் நாட்டுப் பணியில் இழுத்து வந்தது. பால கங்காதர திலகர் மதுரை விஜயம் செய்த போது அவருக்கு வரவேற்பு அளிப்பதில் முன் நின்றவர். 1921 - 22 காலகட்டத்தில் நடந்த நாகபுரி கொடிப்போராட்டத்தில் கலந்துகொள்ள மதுரை பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களை அனுப்பி வைத்ததோடு தானும் சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் மதுரை விஜயத்தின் போது அவர் ஜார்ஜ் ஜோசப் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஹரிஜன நிதிக்காக அலைந்து திரிந்து மக்களைத் தூண்டி ஏராளமான பொருளும், நகைகளும் நிதிக்கு அளிக்கத் தூண்டினார். இவரது இந்தப் பணிக்காக மகாத்மா இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்.

1926இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையை கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு நடப்படி எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். இவரது AICC பதவியின் காரணமாக இவருக்கு வட இந்தியத் தலைவர்களின் நட்பும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மகாநாடுகளுக்கு இவர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற எல்லா போராட்டங் களுக்கும் தொண்டர்களைத் தயார்செய்து அனுப்பும் பணியையும் திறமையாக செய்து வந்தார். அப்படிப்பட்ட அமைப்புகள் பல இடங்களிலும் இருந்தன. காமய கவுண்டன்பட்டியில் இவரது தொண்டர்படை பயிற்சி மையம் இருந்தது. 1930இல் போராட்டங்கள் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் இவர் கள்ளுக்கடை மறியல் செய்து சிறைபட்டார். இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்.

1932இல் காந்தி - இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்து கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாநோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம்! சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கல் தலையிட்டு சமாதானம் செய்து, நிலைமை மோசமடையாமல் காத்தனர்.

1941இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும்படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா? அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல வேண்டாமா? சும்மா வந்ததா சுதந்திரம்?

'தீண்டாமை' எனும் கொடுமைக்கு சாஸ்திரங்களில் சான்றுகள் இல்லை என்று இவர் தீவிரமாக வாதிட்டார். இதனைத் தகுந்த ஆதாரங்களுடன் மகாத்மாவிடம் இவர் வாதிட்டார். இவரது அழுத்தமான சாஸ்திர ஞானத்தையும், வாதிடும் திறமையையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருந்த பிடிப்பையும் கண்டு மகாத்மா காந்தி வியந்து பாராட்டினார். 1942இல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் முடிந்து வெளியில் வந்ததும், இவர் தேசியப் பள்ளிக்கூடம், பாரதி வாசகசாலை, கைக்குத்தல் அரிசி சாப்பிடுவோர் சங்கம் போன்றவற்றை நிறுவினார். ஈ.வே.ரா. அவர்கள் தனது பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எதிர்த்து அதே பத்திரிகைக்கு இவர் ஒரு கட்டுரையை அனுப்பி வெளியிடச் செய்தார். உத்தமபாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த "பாரதி" எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 

1946இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு காட்டி உழைத்தமைக்காக இவருக்கு அரசாங்கம் விருது அளித்து கெளரவித்தது. அதற்காக இவருக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதிக்காகக் கொடுத்து விட்டார். சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசாங்கத்தின் தாமரப் பட்டயம் பெற்ற இவர் 1977இல் காலமானார். வாழ்க முனகல பட்டாபிராமையா புகழ்!

 திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்.
    தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

       1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர்.

        காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.

       1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

       1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார்.
 
      1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார்.

     இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்!

மதுரை மாவட்ட தியாகிகள்:

சுந்தரராஜ ஐயங்கார்.
     இவர் 1899ஆம் ஆண்டில் பிறந்தவர். பத்தாம் வகுப்பு வரை படித்தார். இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். டாக்டர் எஸ்.சுந்தரராஜ ஐயங்கார் எனும் இவருடைய பெயரை பொதுவாக அனைவரும் I.D.F. என்றே குறிப்பிட்டு வந்தனர். இவர் சிறு வயதில் முகவும் முரடனாக இருந்திருக்கிறார். 1918இல் இந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சியைப் பெற்றார். அதன் பயனாக துப்பாக்கி சுடும் பயிற்சியும் இவருக்கு உண்டு. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் புகுந்து இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கிய நாளில் அவருடைய கொள்கை, வழிமுறைகள் இவற்றால் ஈர்க்கப்பட்டு இவர் காந்தி பக்தரானார். முதன்முதலில் காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து மகாத்மா காந்தி அறிவித்த எல்லா போராட்டங்களிலும் இவர் பங்கேற்றார். மிகவும் எளிமையானவர்; எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவர். முதுகுளத்தூர் தாலுகாவில் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக அந்தப் பகுதிகளில் கள்ளுக்கடைகளை இரண்டு முறை மூடும்படியான நிலைமையை உண்டாக்கினார்.

1922இல் மேலூரில் இவர் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1923ஆம் ஆண்டு மறுமுறையும் மறியலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டதற்காக 6 மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருட தண்டனை கிடைத்தது.

பொதுக்கூட்டங்களில் இவர் எளிமையான நடையில் பேசுவார். இவரது பேச்சில் நகைச்சுவை இருக்கும். மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர். பல சின்னஞ்சிறு கதைகளைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பார். இவர் பேசுகிறார் என்றால், அதைக் கேட்பதற்கென்றே மக்கள் திரளாகக் கூடுவர். தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பல தொழிலாளர் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இவர் காலமாகிவிட்டார்.

மு.சுப்பையா பிள்ளை.

மதுரை முனுசாமிப் பிள்ளையின் மகனாக 1911இல் பிறந்தவர் சுப்பையா பிள்ளை. 1930இல் தேசிய காங்கிரசில் இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடவேண்டுமென்கிற எண்ணத்தில் இணைந்தவர். 1930ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கு கொள்ளவிருக்கிறார் என்பதை அறிந்து இவரைப் பிடித்துக் கொண்டு போய் சப் ஜெயிலில் அடைத்து வைத்துவிட்டார்கள். 1932இல் அன்னிய துணி மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு ஒரு ஜவுளிக் கடையின் முன்பாக இவர் மறியல் செய்த போது கைது செய்யப்பட்டு 4 மாத கால சிறை தண்டனை பெற்றார். மதுரை சிறையில் தண்டனை காலத்தைக் கழித்தார். 1933இல் மறுபடியும் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் சமஸ்தானப் பகுதிக்குச் சென்று அங்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டு அங்கு சிறையில் இருந்தார்.

1941இல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டரை வருஷ சிறை தண்டனை பெற்று தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார். 1940இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றார். அதில் இவர் கைதாகி 10 மாத கால சிறை தண்டனை பெற்று, அலிப்புரம் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். மேடைப் பேச்சில் வல்லவர். இவருடைய ஆவேசமான பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு. இவர் காலமாகிவிட்டார்.

ர.சிதம்பர பாரதி.

1905இல் பிறந்தவர் சிதம்பர பாரதி. இவருடைய தந்தையார் பெயர் ரங்கசாமி. 1920இல் தனது 15ஆம் வயதில் அரசியலில் ஈடுபட்டார். மதுரையில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் இவர் பங்கு கொண்டார். முதலில் வன்முறையில் ஆர்வம் இருந்தபோதும், மகாத்மா காந்தியடிகளின் தாக்கம் இவரை சாத்வீகராக மாற்றியது. சுப்பிரமணிய சிவா தனி மனிதனாக ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் பிரச்சாரம் செய்த காலத்தில் இவர் அவருடைய பணிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வீர சவர்க்கார் எழுதிய 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து 1927இல் நடந்த சென்னை காங்கிரஸ் மகாநாட்டில் அனைவருக்கும் விநியோகித்தவர். அந்த நூலை மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ்.குடும்பத்தின் டாக்டர் செளந்தரம் அவர்கள். அந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டது என்பதும் அதை படிப்பதோ விநியோகிப்பதோ குற்றம் என்றிருந்த் நேரத்தில் இவர் அந்தப் பணியில் செயல்பட்டார். அந்த நூலைப் படிப்பதோ, வைத்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இருந்த நேரம் அது. 1928இல் சென்னையில் இவர் ஒரு பத்திரிகையை நடத்தினார். அதன் பெயர் "தேசோபகாரி" என்பது. இவர் தனது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏழுமுறை, அதாவது 1922, 23, 24, 29, 32, 40, 42 ஆகிய ஆண்டுகளில் போராட்டங்களில் கலந்து கொண்டமைக்காகச் சிறை சென்ற தியாகி. மதுரை நகர காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மாகாண காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருந்து வந்தவர். நல்ல சொற்பொழிவாளர். இவரது மேடைப் பேச்சு அனைவரையும் கவர்ந்திழுக்க வல்லது. முன்னாள் சட்டசபை உறுப்பினராக இருந்த இவர் காலமாகிவிட்டார்.

மதுரை தியாகராஜ சிவம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் ஒரு கிராமத்தில் கிராம முன்சீபாக இருந்த சுப்பையர் என்பவரின் குமாரன் இவர். 1900ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆஜானுபாகுவான தேகக் கட்டு, முறுக்கு மீசை, வெள்ளை கதர் ஆடை இவற்றோடு இவர் பெரும் கூட்டத்திலும் பளிச்சென்று தோற்றமளிப்பார். மனதால் மிகவும் மென்மையானவர். இரக்க குணம் படைத்தவர். 1921ஆம் ஆண்டு வாக்கில் சுப்பிரமணிய சிவா மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஊர் ஊராகச் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்த காலத்தில் பல இளைஞர்கள் அவருடைய பேச்சால் கட்டுண்டு காங்கிரஸ் இயக்கத்திற்குள் இணைந்தனர். அப்படி வந்தவர்களில் தியாகராஜ சிவமும் ஒருவர். தான் வகித்து வந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இவர் ஈடுபட்டார். காரியத்திலும் செயலிலும் இவர் மிகவும் கண்டிப்பானவர். அவருடைய பேச்சே மிகவும் கண்டிப்பு மிகுந்ததாக இருக்கும். அவருடைய காலத்தில் இளைஞர்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர் நீலகண்ட பிரம்மச்சாரி. தானும் அவரைப் போல ஒரு தீரமிக்க சுதந்திரப் போராளியாக ஆக வேண்டுமென்பதற்காகத் தன்னுடைய பெயரையும் முதலில் தியாகராஜ பிரம்மச்சாரி என்று வைத்துக் கொண்டார். சுப்பிரமணிய சிவத்திற்கு இவரை மிகவும் பிடிக்கும். இவரை அன்புடன் பீமண்ணா என்றுதான் அழைப்பார். சுப்பிரமணிய சிவம் மதுரையில்ருந்து தொழுநோய் காரணமாக ரயிலில் ஏற அனுமதிக்கப்படாமையால் கால் நடையாகவே நடந்து தொண்டர்களுடன் பாப்பாரப்பட்டிக்குச் சென்று அங்கு உயிர் துறந்தார் அல்லவா? அப்போது சிவம் மகாசமாதி அடைந்த பிறகு அவர் நினைவாக இவர் தன்னுடைய பெயரை தியாகராஜ சிவம் என்று மாற்றிக் கொண்டு, உலகுக்குத் தான் சிவத்தின் வாரிசு என்பதை உணர்த்தினார்.

இவர் 1922இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டும், 1932இல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் இவர் மொத்தம் பதிமூன்றரை மாதங்கள் சிறையில் இருந்தார். தன்னுடைய சிறை வாசத்தை இவர் கடலூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கழித்தார். இவர் சிறந்த பேச்சாளர். இவருக்கு செல்லம்மாள் எனும் மனைவி இருந்தார்.

மதுரை எஸ்.வி.கே. தாஸ்.

1916ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1936இல் தனது இருபதாம் வயதில் காங்கிரசில் சேர்ந்தார். 1938ஆம் ஆண்டு முதல் பல ஊர்களுக்கும் சென்று கிராம மக்களிடம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரசின் முழு நேர தொண்டனாக இவர் பணியாற்றினார். ஹரிஜன முன்னேற்றம், கள்ளுக்கடை எதிர்ப்பு ஆகிய போராட்டங்களில் இவர் பங்கு கொண்டார். காசியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் மாளவியா அவர்களின் பெயரால் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இவர் பணியாற்றி வந்தார். அடிப்படையில் சோஷலிச எண்ணம் உடைய இவர் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற சோஷலிஸ்ட் கட்சியில் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டார். 1949இல் இவரோடு இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொண்டரான பங்கஜத்தம்மாள் என்பவரை இவர் மறுமணம் செய்து கொண்டார். 1972இல் இவர் காலமானார்.

மதுரை தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்.

இளம் வயதிலேயே பால்ய விவாகம் செய்து கொண்டவர் இவர். கணவர் சீனிவாச ஆழ்வாருடன் பஜனைப் பாடல்களும், மேடைகளில் சுதந்திரப் பாடல்களும் பாடி பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தி வந்தார். இவர் பலமுறை சிறை சென்றார். இரண்டரை ஆண்டுகள் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1972 வரை இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. காந்திஜி தலைமையில் இவர் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் 1979 ஜூலை 1இல் இறந்தார்.


திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து.
மதுரை மாவட்டம் திம்மநத்தம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.ஆர்.தங்கமுத்து. இவர் பிறந்தது 24 பிப்ரவரி 1914ஆம் வருஷம். இவர் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்டவர். 1932ஆம் வருஷம் அன்னிய துணி பகிஷ்காரம் செய்து ஜவுளிக் கடைகளின் வாயிலில் மறியல் செய்தார். எனினும் இவர் வயதை எண்ணி இவரைக் கைது செய்யவில்லை. 1942இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறிய போது பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். ஆங்காங்கே காங்கிரசில் பங்கு பெற்ற தொண்டர்கள் பலரும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இவரும் 1942இல் பாதுகாப்பு கைதியாக ஒரு வருஷ காலம் சிறை வைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் தேசிய இலவச பள்ளிக்கூடமொன்றை நடத்தி வந்தார். ஏழை எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அறிவினை ஊட்ட இவர் அந்தப் பள்ளியைப் பயன்படுத்தினார். அது தவிர கதர் அபிவிருத்தி, கதர் பிரச்சாரம் விற்பனை ஆகியவற்றிலும், ஹரிஜன சேவைகளிலும் இவர் பணியினைத் தொடர்ந்தார். முதலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் உறுப்பினராக இருந்த இவர் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் வாழ்நாளில் ஏழைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தி இருந்தார்.

மதுரை கே.என்.கிருஷ்ணன்.
மதுரை நாகசாமி ஐயரின் மகனாக 15-3-1915இல் பிறந்தவர் கிருஷ்ணன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி இவரும் தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தியடிகள் அறிவித்த போது இவர் அதில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை கிடைத்தது. இவர் மொத்தம் மூன்று முறை சிறை சென்றிருக்கிறார். அலிப்புரம் முதலான பல சிறைகளில் இவர் தண்டனை அனுபவித்து இருக்கிறார்.

மதுரையில் 'தீச்சட்டி' கோவிந்தன் எனும் போலீஸ் அதிகாரி இருந்தார். இவர் 1942 அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்ற பெண்களைப் பிடித்து போலீஸ் வண்டியில் ஏற்றி வெகுதூரம் கொண்டு சென்று ஒருவரும் வரமுடியாத காட்டுப் பகுதியில் அவர்களது துணிகளை உருவிக்கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் கொடுத்த துணிகளை அணிந்து கொண்டு அந்தப் பெண்கள் அழுதுகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். இந்தச் செய்தியைக் கேட்ட மதுரை தேசபக்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அந்த இன்ஸ்பெக்டர் 'தீச்சட்டி' கோவிந்தனை பழிவாங்குவது என முடிவெடுத்தனர். அந்த இன்ஸ்பெக்டரின் உண்மையான பெயர் விஸ்வநாதன் நாயர் என்பது. ஒரு நாள் அந்த இன்ஸ்பெக்டர் தனியாக மாட்டிக் கொண்ட நேரத்தில் தேசபக்த இளைஞர்கள் ஒன்றுகூடி அவர் மீது அக்கினி திராவகத்தை ஊற்றி, அவர் முகத்தையும் உடலையும் சேதப்படுத்தி விட்டுத் தப்பிவிட்டனர். அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் கே.என்.கிருஷ்ணனும் ஒருவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அதில் அக்கினி திராவகம் வீசியதாக இவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

இருந்தாலும் போலீஸ் இவர்களை விடுவதாக இல்லை. வேறு ஏதாவது வழக்கில் இவர்களை கைது செய்துவிட துடித்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள் தூக்கிச் சட்டத்தின்படி இவர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி ஒரு வருடமும் மூன்று மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் இவர் இருந்தார்.

அநீதிகளைக் கண்டு பொங்கும் குணமுள்ளவர் இவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தியாகி. நல்ல உழைப்பாளி. தமிழ்நாடு தியாகிகள் சமிதியின் மதுரை நகரப் பொதுச் செயலாளராக இருந்தவர். மாகாண தியாகிகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர்களில் இவரும் ஒருவர். மதுரை நகர முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அமரர் ந.சோமையாஜுலுவுக்கு உறுதுணையாக இருந்து வந்தவர். மக்கள் போற்றும் மாபெரும் தியாகி.

மு. பழனியாண்டி சேர்வை.

இவர் 1930இல் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போரில் தொண்டராகச் சென்று கைதாகி சிறை சென்றவர். அந்த வழக்கில் இவருக்கு 6 மாத சிறை தண்டனை கிடைத்தது. ஊர் ஊராகப் பயணம் செய்து காங்கிரஸ் கொள்கைகளை மக்களுக்கு விளக்கி வந்தவர். 1942இல் நடந்த குவிட் இந்தியா போரில் இவருக்கு ஒன்றரை வருட ஜெயில் தண்டனை கிடைத்தது. வேலூரில் இவர் பாதுகாப்பு கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். காந்தியக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சிறந்த காந்தி பக்தர். அகிம்சை கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய குடும்பத்தில் இவரது சகோதரர்களும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு தியாகங்கள் புரிந்தவர்கள். தம்பி சண்முகம் மற்றும் பல நண்பர்கள் இவருடன் தேச சேவையில் ஈடுபட்டனர்.

மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.
1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.

மதுரை எம்.என்.ஆதிநாராயணன்.

மதுரையில் நாராயணசாமி நாயக்கரின் மகனாக 1913ஆம் வருஷம் பிறந்தவர் ஆதிநாராயணன். 1930இல் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பி காங்கிரசில் உறுப்பினரானார். 1932இல் அன்னிய துணி பகிஷ்காரம் நடந்து வந்த போது, இவர் தொண்டர்களுடன் அன்னிய துணிகளை விற்கும் ஜவுளிக் கடைகளின் முன்பு அன்னிய துணிகளை வாங்காதீர்கள் என்று மறியல் செய்தார். அதற்காக இவருக்கு 6 மாத சிறை தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனை என்பது தீர்ப்பு. அபராதம் கட்ட மறுத்து சிறை தண்டனையை அனுபவித்த பின் இவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். 1930 உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி, பல போராட்டங்களில் 1942 வரை இவர் பங்கு பெற்றிருக்கிறார். பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சிறைகள் இவருக்கு சிறை வாசம் செய்யும் இடமாக இருந்தன. தொழிலாளர் நலனில் அக்கறையுடன் தொழிற்சங்கங்களிலும் பங்கு பெற்றார் இவர். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சங்கத்துக்குத் தலைவராகவும் இருந்தார்.

எம்.ஆர்.எஸ்.மணி.

1912இல் மதுரையில் எஸ்.ராமசாமி சேர்வை என்பவரின் மகனாகப் பிறந்தவர் மணி. 1930இல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்துக்கு மதுரையில் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில் தேர்வாகி திருச்சி செல்ல காத்திருந்த சமயம் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரை பாளையங்கோட்டையில் கொண்டு போய் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது 4 மாத காலம் சிறைவாசம் முடிந்த நிலையில் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1941இல் இவர் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு 11 மாத காலம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து 1942இல் விடுதலையாகி வெளியே வந்த இவரை மறுபடியும் கைது செய்து மதுரையில் 1 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் சிறை சென்றார். இப்போது அவர் சென்றது அலிப்புரம் ஜெயில். 1943இல் விடுதலையானார். ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. மீண்டும் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூரில் 1 மாதம், தஞ்சையில் 18 மாதங்களும் காவலில் வைக்கப்பட்டார். மதுரையில் இருந்த தேசபக்தர்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போனவர்களில் இவரும் ஒருவர். தொழிலாளர் சங்கங்களில் ஈடுபாடு கொண்டவர். பெருந்தலைவர்களாக இருந்த பசும்பொன் தேவர், ப.ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். மதுரையில் மணீஸ் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.

ஏ.வி.செல்லையா.

இவரது தந்தையார் ஒரு சிறந்த தேசபக்தர். எனவே அவருடைய பிள்ளைகளும் அப்படியே. இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது. இவருடைய சகோதரர் அணுகுண்டு ஏ.வி.அய்யாவு ஓர் பிரபலமான போராட்டக்காரர். தேசபக்தர். இவரும் பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையா.

எம். சிவசாமி.

மா.இருளாண்டி பிள்ளை என்பவரின் மகன் இவர். 1920இல் பிறந்தவர். 1940இல் இவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். 1942 புரட்சியில் இவர் பல இடங்களில் புரட்சியைத் தூண்டியமைக்காகக் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு 6 மாத சிறை தண்டனை கொடுத்து பெல்லாரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

து. நவநீதகிருஷ்ணன்.

மதுரையில் துரைசாமி நாயுடு என்பவருக்கு 1909இல் பிறந்தவர் து.நவநீதகிருஷ்ணன். 1930இல் சட்ட மறுப்பு இயக்கத்தின் மூலம் இவர் சுதந்திரப் போரில் குதித்தார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. 1930 ஆகஸ்ட் முதல் இவர் பாளையங்கோட்டை, ராஜமகேந்திரபுரம், சிறைகளில் அடைக்கப்பட்டார். காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சிறந்த நிர்வாகி, சிறந்த தேசபக்தர்.

Thursday, 7 July 2016

பண்புமலர்  

கருணை உள்ளம்

மதுரையைச் சேர;ந்த கிருஷ்ணன் கேட்டரிங் டெக்னாலஜியில் தங்கப் பதக்கம் பெற்று பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்;. படிப்பில் திறமையான கிருஷ்ணனுக்கு நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை கிடைத்தது. சந்தோஷமாக வெளிநாடு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவர பார்த்த காட்சி அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மதுரை நகர வீதியில் அவர் கண்ட காட்சி, உணவு எது? மனிதக் கழிவு எது? என்று கூடத் தெரியாமல் அனைத்தையும் சேர்த்து உண்ணுகின்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர். பதறினார் கிருஷ்ணன். அவருக்கு நல்ல உணவு வாங்கிக் கொடுத்தார். ஆவலுடன் அதை வாங்கி உண்டார்; மனநோயாளி. கிருஷ்ணன் மனதில் ஆழ்ந்த கவலை அடைந்தார்;. இதே போல் மனநிலை பாதிக்கப்பட்ட அதிகம் பேர்; சாலையோரம் இருந்தனர். உடனே முடிவெடுத்தார். தனது வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்துவிட்டார். தனது வாழ்நாளை மனநலம் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக அர்ப்பணம் செய்ய முடிவெடுத்தார். தனது தாயிடம் தனது முடிவினை கூறினார். 
தாயும் சந்தோஷத்தில், “நீ அவர்களைப் பார்த்துக் கொண்டால் நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார். கிருஷ்ணன் மகிழ்ந்தார்;. இதற்காக அக்ஷயா டிரஸ்ட் உருவாக்கினார்;. வண்டி ஒன்று வாங்கினார்;. தினமும் தானே வீட்டில் உணவைத் தயாரித்து பொட்டலங்கள் கட்டினார்;. பொட்டலங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு மன நோயாளிகள் இருக்கும் இடம் தேடி அவர்களுக்கு உணவு வழங்கினார்;. இது போல மதுரை நகரெங்கும் வண்டி சுற்றியது. தினமும் மனநோயாளிகளுக்கு உணவு வழங்கப் படுகின்றன. இச்செயல் இன்றும் மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினமும் அக்ஷயா டிரஸ்ட் வேன் மதுரையில் 120 கி.மீ. வரை பயணம் செய்து இந்த அரிய செயலைச் செய்து கொண்டிருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக தனது வாழ்;க்கையையே தர முன்வந்தது கிருஷ்ணனின் கருணை உள்ளம்.


Wednesday, 6 July 2016


மதுரை பௌத்திக்
          பகுதிக்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் நமஸ்தே! சங்க ரீதியிலான கருத்துக்கள் , மற்றும் பௌத்திக் விஷயங்கள் அனைத்தும் இப்பகுதியில் இடம்பெறச் செய்து, அனைவரையும் அக்கருத்துக்கள் சென்றடையச் செய்வது இதன் நோக்கம்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே 
யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே !
                                            - தாயுமானார்.
பாரத் மாதா கி ஜய்.